Friday, September 11, 2009

தோள் சீலைப் போராட்டம்




திருவிதாங்கூர் நாட்டை இராஜா மார்த்தாண்ட வர்மா ஆண்டு காலத்தில் அந்த நாட்டிற் கென்று சில சட்ட திட்டங்களும் வரன்முறைகளும் உருவாக்கி நடைமுறைப்படுத்தப்பட்டன.

1. அந்த நாடு பத்மநாபசாமி திருக்கோவிலுக்கு காணிக்கை. மன்னர் இருந்தாலும் நிர்வாகத்தை திருக்கோவில் விருப்பப்படியே நடத்த வேண்டும். (இந்தக் கோவில் முழுக்க முழுக்க உயர்சாதியினர் வசமே இருந்து வந்தது)

2. உயர்சாதியினருக்கு நாட்டின் பல பாகங்களிலும் இலவச உணவு வழங்கப்பட வேண்டும்.

3. உழைக்கும் மக்களிடம் இத்தகை செலவுகளுக்காக அதிகமான அளவு வரியை வசூல் செய்ய வேண்டும்.

4. உயர்சாதியினரைத் தவிர மற்ற அனைத்து சாதி ஆண், பெண்கள் அனைவரும் மேலாடை அணியக் கூடாது. இடுப்புக்குக் கீழ் மட்டுமே ஆடை அணிய வேண்டும்

என்றும் சட்டங்கள் இயற்றப்பட்டது.

உழைக்கும் மக்கள் அரசின் நிலத்திலும், உயர் சாதியினரின் நிலத்திலும் கடுமையாக உழைத்தனர். ஆனால் அவர்களுக்கு கூலியாக சிறிதளவு நெல் மட்டுமே வழங்கப்பட்டது. உயர்சாதியினரின் கொடுமைக்கு அளவுகள் இல்லாமல் வாடி வதங்கினர் உழைக்கும் மக்கள். உயர்சாதியினரின் முன் ஒவ்வொரு சாதியினரும் இவ்வளவு தூரத்தில் நிற்க வேண்டும், ஒரு சில சாதியினர் நான்கு அடி தூரத்திலும் இடைப்பட்ட சாதியினர் பதினாறு அடி தூரத்திலும், தாழ்த்தப்பட்ட சாதியினர் நாற்பது அடி தூரத்திலும், பஞ்சம சாதியினர் அவர்களின் முன்பாக வரவே கூடாது. உயர் சாதியினரின் கண்களில் படவே கூடாது. அவர்களைப் பார்த்தாலே தீட்டு என்றும் ஒதுக்கி வைக்கப்பட்டனர்.

உலகில் எத்தனையோ நாடுகள் மற்ற நாட்டின் மேல் படையெடுத்து அந்நாட்டு மக்களை அடிமைப்படுத்தி அவர்களை பல்வேறு வகையினில் சித்ரவதைகளைச் செய்தாலும், ஒரு நாட்டின் மக்கள் ‍அரை நிர்வாணமாகவே இருக்க வேண்டும் என்பது போன்ற கருப்புச் சட்டம் நடைமுறையில் இல்லை. காட்டுமிராண்டித் தனமான இந்தச் சட்டம் உயர்சாதியினரால் உழைக்கும் மக்களை அடிமைப்படுத்தவும், கொடுமைப்படுத்தவும், அவர்களின் உழைப்பை உறிஞ்சவும், சமூகத்தில் அனைத்து விதத்திலும் ஒதுக்கவும் பயன்பட்டது.

மராட்டிய மாநிலத்தில் சிவாஜியின் ஆட்சிகூட மத குருமார்களின் வீருப்பப்படியே நடைபெற்றது. அங்கும் உழைக்கும் மக்கள் கடுமையாக அடக்கி ஒடுக்கப்பட்டனர். ( அப்பொழுது அந்த மாநிலத்தை விட்டு தமிழ்நாட்டிற்கு புலம் பெயர்ந்து அகதிகளாக ஓடி வந்தவர்களே நரிக்குறவர் இன மக்கள்)


1818 ஆம் ஆண்டு மீட் என்ற பாதிரியாரால் இந்தக் கொடுமையைத் தாங்க இயலாமல் மக்களைத் திரட்டி போராட்டங்களைத் தொடங்கினார். ஆனால் 1829 பிப்ரவரி 3ஆம் தேதி திருவிதாங்கூர் அரசு இந்தச் சட்டத்தை மாற்ற இயலாது, உழைக்கும் மக்களுக்கு மேலாடை அணிய அனுமதி கிடையாது என்று மீண்டும் வலியுறுத்தியது.

ஆங்கிலேய அரசு 1859 ஆம் ஆண்டு திருவிதாங்கூர் அரசுக்கு உழைக்கும் மக்களுக்கு மேலாடை அணிய உரிமை வழங்க வேண்டும் என்று வேண்டு கோள் விடுத்தது. அதையும் அரசு செவி சாய்க்கவில்லை. தொடர்ந்த மக்கள் போராட்டமே மேலாடை அணியும் உரிமையை மக்களுக்கு அளித்தது. தோள்சீலை போராட்டம் என்பது 150 ஆண்டுகளுக்கு முன்தான் நடந்தது 15000 ஆண்டுகளுக்கு முன் நடக்கவில்லை என்பதை அனைவரும் கருத்தில் வைப்பது நலம். பெரும்பான்மை மதத்தினரின் மதவெறியானது மிகப் பெரும் அழிவையே உருவாக்கும்.

No comments:

Post a Comment